Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 15 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்சி, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி பிச்சாண்டார் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட வாலக்கட்டை பகுதியில் திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள் நேற்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாத்திரங்களை பரிசுப் பொருட்களாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் தனக்கு பரிசு பொருட்கள் கிடைக்க வில்லை என கேட்டுள்ளார்.
அப்போது இலவச பொருட்கள் தர மறுத்து அவரை திமுகவினர் தாக்கியதாகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அவரது இறப்புக்கு உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை எனவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி-சேலம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் தலைமையில் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b