Enter your Email Address to subscribe to our newsletters

கம்பம், 16 ஏப்ரல் (ஹி.ச.)
குமுளி அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான தேக்கடியில் வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மண்ணாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் 18-வது மலர் கண்காட்சி தேக்கடி - குமுளி சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கியது.
தற்போது தமிழகம், கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் மலர் கண்காட்சியை பார்வையிட இரு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர்.
சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட மலர் வகைகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களும், நூற்றுக்கணக்கான மூலிகை செடிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அலங்காரச் செடிகள், தோட்ட செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான நாற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர்களை கவரும் விதமாக கடல்கன்னி, பேய் பங்களா கண்காட்சி அரங்குகள், ராட்சத ராட்டினங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வேளாண் கருத்தரங்கம், மலர் அலங்கார போட்டிகள், சமையல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த மலர் கண்காட்சியானது மே 3ம் தேதி வரை நடைபெறும். தினசரி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையிடலாம். நுழைவு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள், மாணவர்களுக்கு கட்டணத்தில் சலுகை உண்டு. 7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கட்டணமில்லை என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தாமஸ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b