ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளர் படுகொலை - கடலூர் சிறை கைதியிடம் போலீஸ் தீவிர விசாரணை
ஈரோடு, 16 ஏப்ரல் (ஹி.ச.) ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த உதயகுமார் (44), சின்னமுத்து வீதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். வழக்கம்போல் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வ
கொலை


ஈரோடு, 16 ஏப்ரல் (ஹி.ச.)

ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த உதயகுமார் (44), சின்னமுத்து வீதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

வழக்கம்போல் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியில், கண் இமைக்கும் நேரத்தில் உதயகுமாரின் கழுத்தை அறுத்ததோடு, வயிற்றிலும் சரமாரியாக குத்திவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இந்தக் கொலையில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

எனினும், கொலையின் காரணம் ஆரம்பத்தில் தெளிவாக தெரியவில்லை.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயன் என்பவருக்கு இந்தக் கொலையில் முக்கிய தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 13க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, விஜயனை காவலில் எடுத்து விசாரிக்க ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் போலீசார் அனுமதி கோரினர்.

நீதிமன்றம் 2 நாள் காவல் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது விஜயனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொலை தொழில் போட்டியால் நடந்ததா அல்லது இதன் பின்னணியில் வேறு பெரிய சதி உள்ளதா? என்பது போலீஸ் விசாரணையின் முடிவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam