Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவிலில்
11 நாட்கள்
பங்குனி திருவிழா நடைபெறும்.
இந்த பிரசித்தி பெற்ற திருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பொம்மை, பலூன், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட கடைகளை அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட ஒரு கும்பல், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் நடத்தி வந்த பொம்மை கடையில் இருந்து பொருட்கள் வாங்கிவிட்டு பணம் வழங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் மோசமடைந்த நிலையில், அந்த கும்பல் பெண் வியாபாரியின் மேலாடையை இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டதுடன், தடுக்க முயன்ற அவரது கணவரையும் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த பெண் நடக்க முடியாத நிலையில், இருவர் கைத்தாங்கலாக ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நெல்லை நோக்கி அனுப்பப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் அச்சமடைந்த பெரும்பாலான வடமாநில வியாபாரிகள், வழக்கமாக திருவிழா முடிந்த பிறகும் ஒரு வாரம் தங்கியிருந்து வியாபாரம் செய்வதை தவிர்த்து, இரவோடு இரவாக தங்களது கடைகளை மூடி, ரயில் மூலம் நெல்லை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து வடமாநில வியாபாரிகள் கூறுகையில்,
பொருள் வாங்கி பணம் தர மறுத்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் மது போதையில் இருந்தனர்.
காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்.
நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.
எங்கள் வாழ்க்கை பிழைப்பிற்காகவே ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்கிறோம்.
பிரச்சனைகள் வேண்டாம் என்பதால் இங்கிருந்து கிளம்புகிறோம் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam