தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாமக்கல், 16 ஏப்ரல் (ஹி.ச.) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல் 16) காலை 11 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா, மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் இன்று மக்களவையில
Delimitation MK Stalin


நாமக்கல், 16 ஏப்ரல் (ஹி.ச.)

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று

(ஏப்ரல் 16) காலை 11 மணிக்கு கூடுகிறது.

கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா, மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஏப்ரல் 18- ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் மேற்கண்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்திருந்த போதிலும், தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, இந்த மசோதாவுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதலே தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், இன்று

(ஏப்ரல் 16) தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுமாக திமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புச்சட்டை அணிந்தவாறு கொடிக்கம்பத்தில் கருப்புக்கொடியை ஏற்றி வைத்து, மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, போராடும் போராடும்...தமிழ்நாடு போராடும்.....வெல்வோம் ஒன்றாக....என்று முழக்கமிட்டார்.

இந்நிகழ்வின் போது,

அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜேஷ்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

Delimitation:தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது.

டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! இன்று, தமிழர்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.

இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையில் தற்போது இருக்கும் 543 தொகுதிகளை 850 ஆக உயர்த்துவதே, இந்த தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவின் நோக்கம் ஆகும்.

இந்த தொகுதி மறுவரையறையானது, மக்கள்தொகை அடிப்படையில் நடை பெறவுள்ளது.

இதனால் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளும், மக்கள்தொகை கட்டுப்பாட்டை முழுமையாக அமல்படுத்திய தென் மாநிலங்களுக்கு குறைவான தொகுதிகளும் கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / ANANDHAN