ஊட்டி அருகே புலி தாக்கியதில் கூலி பெண் தொழிலாளி உயிரிழப்பு
நீலகிரி, 16 ஏப்ரல் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த அனுப்பபுரம் பகுதியில் வசித்து வந்தவர் பார்வதி (56). இப்பெண் கூலி தொழிலாளியாக பணிபுரிந்த வந்த நிலையில், தனது கணவர் இறந்த பின்பு, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 11
Tiger Attack


நீலகிரி, 16 ஏப்ரல் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த அனுப்பபுரம் பகுதியில் வசித்து வந்தவர் பார்வதி (56). இப்பெண் கூலி தொழிலாளியாக பணிபுரிந்த வந்த நிலையில், தனது கணவர் இறந்த பின்பு, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த பார்வதி வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் கவலை அடைந்தனர். முதலில் அவர் உறவினர் வீடுகளுக்கு சென்றிருப்பார் என நினைத்திருந்த குடும்பத்தினர், இரண்டு நாட்கள் கடந்தும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்து, காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பைக்கரா வனச்சரகர் மஞ்சுஹாஷினி தலைமையில் வனத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேயிலைத் தோட்டப் பகுதியில் வனவிலங்கு தாக்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் அடையாளங்கள் கண்டறியப்பட்டன.

பின்னர் நக்சல் தடுப்பு சிறப்பு படையின் ‘ஓமேகா’ பிரிவினர் தேடுதல் நடத்தி, அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கற்பகம் காப்புக்காட்டில் பார்வதியின் உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து புலி தாக்கியதால் பார்வதி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பைக்கரா போலீசார் மற்றும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் ரூ.10 லட்சம் நிவாரணத்தில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் தொகையை, பார்வதியின் மகன் பிரபாகருக்கு வனத்துறையினர் வழங்கினர்.

நீலகிரி மாவட்ட வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், கட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊட்டி நகர குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. இதனால் அப்பகுதியில் மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN