கொரானாவை விட கொடியவர் செந்தில் பாலாஜி - கோவையில் கொந்தளித்த இபிஎஸ்
கோவை, 16 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை சித்தபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து வி.கே.கே.மேனன் சாலை வரை ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்தார். அதன்
EPS


கோவை, 16 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை சித்தபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து வி.கே.கே.மேனன் சாலை வரை ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்தார்.

அதன் பிறகு அங்கு குழுமியிருந்த மக்களிடையே இபிஎஸ் பேசியதாவது;

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் தொகுதியில் கே.ஆர்.ஜெயராமன் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வானதி சீனிவாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும், ஓரிரு நாளில் வந்துவிடுவேன் நீங்கள் சென்று பிரசாரம் செய்யுங்கள் என்று கூறினார்.

இந்த மூன்று பேரும் ஏற்கனவே எம்.எல்.ஏக்களாக இருந்து மக்கள் பணியாற்றியவர்கள். அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன் இருவருக்கும் இரட்டை இலை சின்னத்திலும், வானதி சீனிவாசனுக்கு தாமரை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொடிய கொரோனா வைரஸ் நோய் பரவியது. அந்த கொடிய நோயை விட மிகக் கொடுமையான ஒன்று, கரூரில் இருந்து காற்றில் வந்து கோவை தெற்கு தொகுதியில் பரவியிருக்கிறது. திரும்பச் சொல்கிறேன் கொரோனாவுக்குக் கூட மருந்து இருக்கிறது

இப்போது இங்கு வந்திருக்கும் வைரஸுக்கு மருந்தே இல்லை. உங்கள் வாழ்க்கையை முடித்துக் கட்டிவிடுவார். கரூரை காலி செய்துவிட்டு, கோவை தெற்கில் நுழைந்திருக்கிறார், அவரை விரட்டி அடிப்பீர்களா? சிந்தியுங்கள், ஆண்டவன் மூளையை நல்ல சிந்தனையை வளர்ப்பதற்குக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் ஆண்டவன் கொடுத்த மூளையை வைத்து, தவறாக சிந்திப்பதே தீய எண்ணம்தான். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும், நான் பெயர் சொல்ல விரும்பவில்லை, அதற்குத் தகுதியில்லாதவர்.

10 ரூபாய்க்கு மதிப்பு கொடுத்தவர் பற்றி ஸ்டாலின் சொல்கிறார், மேற்கு மண்டலத்தின் சிம்ம சொப்பனமாக இருந்தவர், கோடு போட்டால் ரோடு போடுவாரம், ரோடு போடமாட்டார் ரோடு போட்ட மாதிரி படம் எடுப்பார். கரூரில் ரோடு போடாமல் படத்தை எடுத்து, நான் சட்டமன்றத்தில் பேசி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது பேசிய வாய் தான் அப்போதும் பேசியது. செந்தில் பாலாஜியை என்னவெல்லாம் பேசினீனார்..? இதே ஸ்டாலின் கரூரில் முன்பு பேசும்போது அவர் மோசமானவர் என்றார், அசிங்கப்படுத்தினார். அவரது தம்பி ஆள் கடத்திலில் ஈடுபட்டவர், ஸ்ப்ரிட் கடத்தியவர் என்றெல்லாம் சொன்னார். இதையெல்லாம் ஆதாரத்தோடு எல்.இ.டி.யில் போட்டு காட்டியிருப்பேன். ஆனாலும் காட்ட விரும்பவில்லை.

ஆனால், நம் வேட்பாளர் காட்டுவார். வீடு வீடாகச் சென்று தோலுரித்துக் காட்டுவார். தலைமைக்குச் சேரவேண்டியதை செந்தில் பாலாஜி கரெக்டாக கொடுத்துவிடுவதால், ஸ்டாலின் இப்போது அவரை புகழ்ந்து பேசுகிறார்.

அதிமுகவைப் பொறுத்தவரை மக்களை நம்பியிருக்கிறோம், இங்கிருக்கும் வேட்பாளர் டப்பை நம்பியிருக்கிறார். ஒரு ரூபாய் செலவு பண்ணினால், என்ன கிடைக்கும் என்று முதல் போட்டு லாபம் எடுக்கும் அரசியல் வியாபாரி. இப்போது பார்த்தால் கவர்ச்சியாகத் தெரியும், ஆனால் ஏமாந்துவிடாதீர்கள்.

அவர் ஏன் கரூரில் போட்டியிடவில்லை? நான் எடப்பாடியில் நிக்கிறேன், வேலுமணி தொண்டாமுத்தூரில் நிக்கிறார், கரூரில் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் வெளியேறிவிட்டார். நான் எடபபடியில் 11வது முறையாக நிக்கிறேன்.

இன்னும் என் தொகுதி மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்கவில்லை. நான் தொகுதிக்குப் போகவில்லை என்றாலும், என் மக்கள் என்னை நேசிக்கிறார்கள். இவர் கரூரில் சட்டியைச் சுரண்டி கவுத்தி வைத்துவிட்டார், அதனால் இங்கு வந்திருக்கிறார்.

கோவை செல்வம் கொழிக்கும் பகுதி, இந்தப் பகுதியில் தங்கத்துக்கு முத்திரை வைக்கிறார்கள். ஆனால், இங்கு அவர் முத்திரையை பதித்துவிட்டுப் போய்விடுவார், எனவே, கோவை தெற்கு தொகுதி மக்கள் விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.

அவர் சட்டமன்றத்தில் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா? கருணாநிதியை கடுமையாகப் பேசினார். சட்டமன்றத்தில் பதிவு உள்ளது, அதை நீக்க முடியாது. டிரான்ஸ்போர்ட் மினிஸ்டராக செந்தில் பாலாஜி இருந்தபோது டிக்கெட் அடிக்கிற மெஷினில் கூட ஊழல் செய்ததாக ஸ்டாலின் சொன்னார். இப்போது தூய்மையானவராக அடையாளம் காட்டுகிறார். இந்த 5 கட்சி அமாவாசை.

ஒரே ஐந்தாண்டுகளில் இரண்டு கட்சி சின்னத்தில் ஜெயித்தவர். அதிமுகவில் முதலில் ஜெயித்தார், இங்கிருந்து நீக்கினோம், திமுகவில் சேர்ந்து ஜெயிக்கிறார்.

கரூரில் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார், நாமம் போட்டுவிட்டு கோவை தெற்கு தொகுதிக்கு வந்துவிட்டார். அரக்கனை விடக் கொடியவர், மனிதாபிமானம் இல்லாத ஒருவர் இங்கு போட்டியிடுகிறார். கொங்கு மக்கள் சிந்தித்து தீர்ப்பளிப்பவர்கள், அதனால் நல்லவர்களை தேர்வுசெய்யுங்கள், அர்ஜூனன், ஜெயராமன் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுங்கள்.

திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையான உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள்.

வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர்.

மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா? விண்ணை முட்டும் அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 40 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய். பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய். இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய். கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய். நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 500 ரூபாய். துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய். உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது.

கோவை தொழிலாளர் நிறைந்த மாவட்டம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம், நல்லாட்சி மலரும் என்று எண்ணிப் போடுங்கள். எம்ஜிஆர் தீயசக்தி திமுகவை வேரோடு அழிக்கச் சொன்னார், அழிப்பீர்களா?

தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் பிரச்னையாம். எங்கே தேர்தல் நடக்கிறது? சட்டமன்றத் தேர்தல் பற்றித்தானே பேச வேண்டும். எதற்கு டெல்லியை இழுக்கிறீர்கள். அதிமுக பற்றி தவறான ஆதாரம் எதுவும் இல்லை. அதனால் தான் அப்பாவும் மகனும் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். உங்கள் ஆட்சியில் ஊழல் மலிந்து வழிந்துவிட்டது. அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் எங்களைப் பற்றி பேசுகிறார்கள்.

முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்தபோது, அமித் ஷா அதிமுக தலைமை என்று சொல்லிவிட்டார், அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்லிவிட்டார். அப்புறம் எதற்கு டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என்கிறிர்கள்..? அரைச்ச மாவையே அரைக்கிறார், வேறு ஒன்றும் தெரியாது. பால்டாயில்…. நான் யார் பேரையாவது சொன்னேனா? ஏன் ஒருத்தருக்கு மட்டும் கோபம் வருகிறது, குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. என்னை மட்டுமல்ல என் தொண்டனைக் கூட தொட்டுப்பார்க்க முடியாது.

செந்தில்பாலாஜி சொல்வதைக் கேட்டு கரூரில் அதிமுகவினர் மீது காவல்துறை பொய் வழக்குகள் போட்டிருக்கிறது, அதிமுக ஆட்சியில் அத்தனையும் தோண்டியெடுக்கப்பட்டு, தவறான வழக்குப் பதிவுசெய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அன்று இருந்த பழனிசாமி வேறு, இன்றுள்ள பழனிசாமி வேறு.

ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என்று பாருங்கள்.

ஆட்சி மாறும் போது காட்சிகள் மாறும், சக்கரம் சுற்றுகிறது. அரசு அதிகாரிகள் நடுநிலையோடு இருக்க வேண்டும். கரூரிலும், கோவை மாவட்டத்திலும் நடுநிலையாக நடக்காத அரசு அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன், துணிச்சலாக எடுப்பேன் சொன்னதை செய்வேன் பழனிசாமி.

அதிகாரிகள் சட்டத்தின் படி நடக்க வேண்டும், அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்காக தவறான செயலில் ஈடுபட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. நிச்சயமாக உறுதிபடச் சொல்கிறேன், யாராலும் காப்பாற்ற முடியாது. தவறு செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் விட்டுவைக்க மாட்டேன்.

என்ன நடந்தாலும் அதுபற்றி கவலையில்லை. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள், திமுகவிடம் வாங்கவில்லை. ஒருகட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டால் உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதுவரை எந்த இடத்திலும் நான் இப்படிப் பேசவில்லை, இங்குதான் பேசியிருக்கிறேன்.

இங்கிருக்கும் வேட்பாளர், ஆட்சி மாறினால் ஆளே காணாமல் போய் ஒளிந்து கொள்வார். ஏனென்றால் அவ்வளவு வழக்குகள் இருக்கிறது. அவரையே அவரால் காப்பாற்றிக்கொள்ள முடியாது. பிறகு அவரது பேச்சைக் கேட்கும் அதிகாரிகளை எப்படி காப்பாற்றுவார்…?

மக்களும் சிந்திக்க வேண்டும். எவ்வளோ ஆசை காட்டுவார்கள். தேர்தல் விதிமுறைப்படி இதற்கு மேல் பேசக்கூடாது. ஆனால், உங்களுக்குத் தெரியும், அவரை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். அற்புதமான வேட்பாளர் தெற்கு தொகுதி வேட்பாளர் அர்ஜுணன், எனது நண்பர், உங்களுக்காக பாடுபடக்கூடியவர், நான் முதல்வராக இருந்தபோது மக்கள் பிரச்னைக்குத் தான் கடிதம் கொடுத்தார், அவர் சொந்தப் பிரச்னைக்கு ஒரு கடிதம் கூட கொடுக்கவில்லை.

இவரை விட நல்ல வேட்பாளர் எங்கு தேடுவது..?

திமுக வேட்பாளர் டெண்டு கொட்டகை பட்டி போடுவார். இந்த தொகுதி மக்கள் மனிதர்களா அல்லது ஆடு,மாடா? ஆட்டுப் பட்டியில் இரும்புக் கதவு போட்டு, அதில் அவரை அடைக்கப்போகிறோம். மக்களை வஞ்சிக்காதீர்கள். தவறான் வழியைப் பின்பற்றினால், அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று வேட்பாளரை எச்சரிக்கிறேன்.

டென்ட் போடுவது, ஆட்களைக் கொண்டுவந்து அடைப்பது இதையெல்லாம் விட்டுவிட்டு, ஜனநாயக முறையில் மக்களை சந்தியுங்கள். ஆடு , மாடு அடைப்பது போன்று மக்களை அடைப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பட்டியல் போட்டு எனக்குக் கொடுப்பார்கள்.

அவர்களுடைய எதிர்காலத்தில் பாதிக்கும்.

இங்கு சுயேட்சை வேட்பாளர் 18 பேரை போட்டுவைத்திருக்கிறார். அவர் மூளையை நல்லதுக்குப் பயன்படுத்த மாட்டார், கெட்டதுக்குத்தான் பயன்படுத்துவார்.

இதுக்கெல்லாம் மக்கள் ஏமாந்துவிடுவார்களா? கொங்குப் பகுதியின் தலைநகர் கோவை. சிறு, நடுத்தர, குறுந்தொழில்கள் பாதிப்பு என்றார்கள் ஜிஎஸ்டியில் பிரச்னை என்றார்கள், அதிமுக உங்களுக்கு துணை நிற்கும், இடர்ப்பாடுகள் களையப்படும்.

கொரோனா காலத்தில் கடன் வழங்கினோம் வட்டியை குறைத்தோம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிகம். அதிக தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். எல்லா பிரச்னைகளும் முழுமையாக களையப்படும். விஸ்வகர்மா கோரிக்கை கொடுத்துள்ளீர்கள், அதுவும் நிறைவேற்றப்படும்.

அனைத்து சமூக கோரிக்கையும் அதிமுக ஆட்சியில் அழைத்து பேசி பூர்த்தி செய்யப்படும். இன்று ஊர் முழுக்க கருப்புக்கொடி கட்டுகிறார்கள். ஆனால், கோவையில் எங்கும் இல்லை. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையில் பாதிப்பு என்கிறார் ஸ்டாலின்.

ஏற்கனவே உள்துறை அமைச்சர் இங்கு வந்தபோது, தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். பிறகு எதற்கு கருப்புக் கொடி என்று தெரியுமா..? இவர் சாதாரண ஆளில்லை. எப்படியும் நாடாளுமன்ற வரைமுறை செயல்படுத்தப்படும் என்று இவருக்கு முன்கூட்டியே தெரியும்.

கருப்புக்கொடி காட்டினால், நானும் போராட்டம் செய்தேன், மத்திய அரசு பணிந்துவிட்டது என்பார். ஸ்டாலின் நினைப்பதற்கும் மேலாக அற்புதமாக நாடாளுமன்ற மறுவரையறை செய்யப்போகிறார்கள். அப்போது அவர், நான் கருப்புக் கொடி கட்டியதால் மத்திய அரசு பயந்துபோய் அவர் சொல்வதை ஆமோதித்ததாகச் சொல்வார்.

மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் தெளிவாக உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தான் செயல்படுத்தப்படும் என்று சொல்லிவிட்டார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் மகிழ்ச்சி இல்லை. அவர் ஸ்டாலின். ஏனென்றால் அவர் கண்ட கனவு பலிக்கவில்லை. அதற்குத்தான் கருப்புக் கொடி போராட்டம்.

இங்கு யாருமே கட்டவில்லை. அவர் தமிழ்நாடு பதறும் என்கிறார். திமுக ஆட்சி இருக்கும் வரை மதுரை மண்ணில் அவர் காலே வைக்கவில்லை, அதிமுக ஆட்சியில்தான் மதுரைக்கே சென்றார். இவரது வீராதி வீரச் செயல் எல்லாம் பார்த்துவிட்டோம். திமுக கூட்டணி சொவது தவறு, மத்திய அரசு உறுதிமொழி கொடுத்துவிட்டு, அதன்படி எந்த பாதிப்பும் இல்லாத வகையில் மறுவரையறை செயல்படும்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு செய்வதை தடுப்பதற்குத்தான் இத்தனை வேலைகள் செய்கிறார் ஸ்டாலின். இதை செய்தால் பெண்கள் மத்தியில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் அதை தடுக்கத்தான் இப்படி கருப்பு கொடி கட்டச்சொல்லி தவறான தகவல் பரப்புகிறார், அதை யாரும் நம்ப வேண்டாம்.

இன்னொரு பெரிய மனிதர் சிதம்பரம். எடப்பாடி பழனிசாமி சொல்வது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார். வேறு யார் சொல்ல வேண்டும்..? மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் சொன்னார்கள் என்றுதான் சொல்ல முடியும். சிதம்பரம் சொன்னார் என்றா சொல்ல முடியும்?

எத்தனை வருஷம் மத்தியில் மந்திரியாக இருந்தீர்கள், தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்தீர்கள். உங்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்குத் தகுதி இருக்கிறதா…? என்ன யோக்கியதை இருக்கிறது?

மக்களை பற்றி யாரும் கவலைப்படவில்லை. திமுக கூட்டணியில் 39 எம்பிக்கள் இருக்கிறார்கள். இவர்கள் போய் எத்தனை வருடம் ஆகிவிட்டது, ஏதாவது குரல் கொடுத்தார்களா..? பெஞ்சை தேய்க்கிறார்கள், மக்கள் ஓட்டுப்போட்டது வேஸ்ட். என்ன அழுத்தம் கொத்தீர்கள், இதே அதிமுக காவிரி நதிநீர் பிரச்னை வந்தபோது 37 அதிமுக எம்பிக்களும் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தோம்.

ஒரு கட்சி தமிழ்நாட்டு மக்களின் விவசாயிகளின் உரிமைக்காக ஒத்திவைத்த சரித்திரம் இல்லை. நீட் என்று சொல்கிறார், யார் கொண்டுவந்தது..? 2010 டிசம்பர் 21ம் தேதி காங்கிரஸ் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தும், திமுகவைச் சேர்ந்த இணை அமைச்சர் காந்தி செல்வனும் கொண்டு வந்தார்கள்.

கொண்டுவந்ததும் அவர்கள் தான், எதிர்ப்பதும் அவர்கள் தான். எப்படி டபுள் கேம் ஆடுகிறார்கள்..? இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசினீர்களா? எதுவுமே இல்லை. எல்லாமே பில்டப் கொடுத்து தேர்தலை வெல்வதற்குப் போடும் நாடகம்.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கோவை விமான நிலையம் அருகே மாணவி பாலியல் தொல்லை, மீஞ்சூரில் பாலியல் வன்கொடுமை செய்து வெட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு.

போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

இங்கிருக்கும் கட்டிடம் நாம் கட்டினோம், நான் கட்டிய பாலத்தில் காரில் போகிறார். நாம் பெற்ற பிள்ளைக்கு இவர் பேர் வைக்கிறார். பேர் வைகக் மட்டும்தான் இவருக்கு தகுதி இருக்கிறது. திட்டங்கள் கொண்டுவர அதிமுகவுக்குத் தான் தகுதியுள்ளது. 1652 கோடியில் அவிநாசி அத்திக்கடவு திட்டம், இரண்டாவது திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தினால் கைவிட்டனர், மீண்டும அதிமுக ஆட்சி வந்ததும் செயல்படுத்தப்படும்.

கூட்டுக்குடிநீர் திட்டம், 1661 கோடி 10 கிமீ பாலம் கட்டினோம், மெட்ரோ ரயில் திட்டம் முடங்கிவிட்டது, விமான நிலைய விரிவாக்கம் மீண்டும் மேற்கொள்ளப்படும், ராணுவ தளவாட பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டம், 320 கோடியில் புறவழிச்சாலை, 290 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இரண்டடுக்கு மேம்பாலம், சாலைகள், அரசு கலை கல்லூரிகள், குடிநீர் திட்டப்பணிகள், ரயில்வே மேம்பாலங்கள், தனித் தாலுகாக்கள், கோட்டங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குளங்கள் சீரமைப்பு, இத்தனையும் செய்திருக்கிறோம்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். தில்லு திராணி இருந்தால் கோவைக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்ல வேண்டும். 2011-21 வரை அதிமுக ஆட்சியில் செய்ததை நான் சொல்கிறேன், உங்கள் ஐந்தாண்டுகளில் செய்ததை நீங்கள் சொல்லுங்கள், மக்கள் தீர்ப்பளிக்கட்டும். வெள்ளனூர் பஸ் நிலையம் கிடப்பில் உள்ளது, அதிமுக ஆட்சியில் தொடங்கப்படும்.

அரசு ஊழியர்கள், படிக்காதவர்கள், படித்தவர்களையும் ஏமாற்றிவிட்டார் ஸ்டாலின். பழைய ஓய்வூதியத் திட்டம் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு செய்யவில்லை. அதிமுக 244 வது வாக்குறுதியில் சொல்லியிருக்கிறோம் அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி முடிந்ததைச் செய்வோம் என்று சொல்லியிருக்கிறோம்.

திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும்.

பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி தரமில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்து கடையில் கிடைக்கும் அரிசி போன்றே ரேஷன் கடையில் கொடுக்கப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம்.

எத்தனையாயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு கடனும் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம், வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். பட்டியலின, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் வாரிசுகள் தனிக்குடித்தனம் சென்றாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

மீனவர்களுக்கும் கான்கிரீட் வீடு. கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செலவை அரசே செலுத்தும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயமாக தொழில் தொடங்கினால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தேவையான வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அனுமதி பெற்று நடத்த 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும், பதிவுசெய்யப்பட்ட வீரர்களுக்கு காப்பீடு செய்து பிரீமியத்தை அரசே செலுத்தும். இனி காளை பதிவு ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டு, பழைய முறையே தொடரும்.

மீண்டும் 18ம் தேதி கோவை மாநகருக்கு பிரதமர் மோடி வருகிறார், அவரது பேச்சைக் கேளுங்கள். வலிமையான பாரதம், வளமான தமிழகம் அமையும். நம் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்திலும் வாக்களியுங்கள்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபைஸ்டாலின். அதிமுக வின்னிங், நல்லாட்சி கம்மிங்… என்று முடித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN