2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - மொடக்குறிச்சி தொகுதி கள நிலவரம்
ஈரோடு, 16 ஏப்ரல் (ஹி.ச) ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள மொடக்குறிச்சி பல்வேறு வரலாற்று மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைக் கொண்ட ஊராகும். நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள காங்கேயன்பாளையத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் நட
Modakurichi Constituency


ஈரோடு, 16 ஏப்ரல் (ஹி.ச)

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள மொடக்குறிச்சி பல்வேறு வரலாற்று மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைக் கொண்ட ஊராகும்.

நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள காங்கேயன்பாளையத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் நடுவில் ஒரு குன்றின் மீது ஓம்கார வடிவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இது கொங்கு நாட்டின் 'பிருத்வி' (மண்) தலமாகப் போற்றப்படுகிறது. இங்குள்ள லிங்கம் அகத்திய முனிவரால் மணலால் வடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

மொடக்குறிச்சி பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இங்கு குறிப்பாக மஞ்சள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

இப்பகுதி விவசாயிகள் ஒருங்கிணைந்து 'மொடக்குறிச்சி கூட்டு விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம்' போன்ற அமைப்புகள் மூலம் நவீன விவசாய முறைகளை மேற்கொள்கின்றனர்.

இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே மொடக்குறிச்சி தொகுதி ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், விவசாயப் பிரச்சினைகளை வலியுறுத்தி 1033 வேட்பாளர்கள் இத்தொகுதியில் போட்டியிட்டனர்.

இதன் காரணமாக தேர்தல் ஆணையம் ஒரு பெரிய புத்தக வடிவிலான வாக்குச்சீட்டைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

ஈரோடு மாவட்டத்தின் ஒரு முக்கிய வட்டமான இது, மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. காவிரி ஆறு இப்பகுதியின் வழியே பாய்வதால், நிலம் செழுமையாகவும் பசுமையாகவும் காணப்படுகிறது.

இங்கு, கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

ஆண் - 99,241

பெண் - 1,08,411

மூன்றாம் பாலினத்தவர் - 12

மொடக்குறிச்சி, கொடுமுடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் அவல்பூந்துறை, மொடக்குறிச்சி, பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி, வெள்ளோட்டாம்பரப்பு, சிவகிரி, கொள்ளங்கோயில், ஊஞ்சலூர், வெங்கம்பூர், கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம் பேரூராட்சிப் பகுதிகளும் இத்தொகுதிக்குள் வருகின்றன.

மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி என இரு தாலுகாக்களைக் கொண்ட இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், நாடார், வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பரவலாக உள்ளனர்.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள்:

இத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலிங்கராயன், கீழ்பவானி கால்வாய்கள் மூலம் மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது.

மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பல ஆண்டுகளாக விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். நீர் மேலாண்மை பிரச்சினையும் தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

வேட்பாளர்கள் நிலவரம்:

இந்த தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 14 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக 7, திமுக 4, காங்கிரஸ் 2, பாஜக 1 முறை வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2021-ல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜக சார்பில் மருத்துவர் சி.சரஸ்வதி போட்டியிட்டனர். இதில் 281 வாக்குகள் வித்தியாசத்தில் சரஸ்வதி வெற்றிபெற்று மொடக்குறிச்சி தொகுதியில் பாஜகவின் முதல் வெற்றியை பதிவு செய்தார்.

நடப்பாண்டு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் சா.செந்தில்நாதன், அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் எஸ்.கிருத்திகா, தவெக சார்பில் டி.சண்முகன், நாதக சார்பில் மோ.அருண்குமார் ஆகியோர் பேட்டியிடுகின்றனர்.

மதிமுக வேட்பாளர் சா.செந்தில்நாதனின் தந்தை பூங்கொடி சாமிநாதன் திமுக, மதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருந்தபோதிலும், செந்தில்நாதன் தேர்தலுக்கு புதியவர். ஏற்கெனவே கடந்த தேர்தலில் இத்தொகுதியில் திமுக போட்டியிட்ட நிலையில், தற்போதும் திமுகவுக்கே ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பலர் கட்சித் தலைமையிடம் காய் நகர்த்தி வந்தனர். மதிமுகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டதால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் மதிமுக வேட்பாளருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக வேட்பாளரான எஸ்.கிருத்திகா, நடப்பு சட்டப்பேரவை உறுப்பினரான சரஸ்வதியின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சேவைப் பணிகளை ஆற்றி வருவதாலும், எம்எல்ஏவின் மருமகள் என்பதாலும் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமாகி உள்ளார். பாஜகவுக்கு 2-வது முறையாக வெற்றியைத் தேடித் தரும் வகையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மொடக்குறிச்சி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் டி.சண்முகனும், தேர்தலுக்கு புதியவர்தான். எனினும், விஜய்யின் பிரச்சாரம் தமிழகத்தையே ஆட்கொண்ட நிலையில், ஈரோடு மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் மொடக்குறிச்சி தொகுதி தவெகவினரும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு தீவிர களப்பணியாற்றிவருகின்றனர்.

நாதக வேட்பாளர் மோ.அருண்குமாரும் தேர்தல் களத்தில் புதியவர். அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குகள் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

2-வது வெற்றியை ருசிக்கும் நோக்கில் பாஜகவினரும், முதல்முறை வெற்றியை தனதாக்கும் முயற்சியில் மதிமுக, தவெக, நாதக கட்சியினரும் தீவிரமாக களப்பணியாற்றி வருவதால், மொடக்குறிச்சியை கைப்பற்றி சாதனை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / vidya.b