Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகின்றார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.
234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது.
விஜய் பிரசாரத்தின் போது தவெக சார்பில் பல வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.
தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன் கொள்கை தலைவர்களின் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட்டார்.
இதனை விவசாயி, ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற எஸ்பி அமிர்தலிங்கம், மீனவர் ஒருவர் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூறியதாவது,
என்னுடைய தாய்நாடு, உங்களுடைய தாய்நாடு, நம் தாய்நாடு. நம் தமிழ்நாட்டின் முதல் பெருமை நமது தமிழ் மொழி.
நம் தமிழுடைய முதல் பெருமை திருக்குறள். அந்த திருக்குறள் சொன்ன பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கோட்பாடு.
திறக்குளும் நமக்கு ஒரு வழிகாட்டி. அதனால் திறக்குறள் சொன்ன அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து நமது தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் இருக்கும். திருக்குறள் சொன்ன அறம், பொருள், இன்பத்தில் அறம் என்றால் தூய்மையான மனதோடு நல்லது செய்ய வேண்டும், நேர்மை என்பது கூட அர்த்தம் இருக்கிறது.
இவையெல்லாம் ஒரு அரசாங்கத்துக்கும் இருக்க வேண்டிய பண்புகள். பொருள் என்றால் அது தனி மனிதன் தேட வேண்டிய பொருள் என்பது அர்த்தம் அல்ல, அது அரசியல், ஆட்சி முறை, கல்வி, வேளாண்மை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பொருள் தேடும் முறை என்று கூட சொல்வார்கள். இன்பம் என்றால் மகிழ்ச்சி என்று சொல்லலாம்.
ஆனால் அது எப்படிப்பட்ட இன்பம், கலங்காத மன உறுதி, அறிவு, தேடல் மற்றும் நேர்மையான உழைப்பு மூலம் வருவது தான் நிஜமான இன்பம் என்று சொல்லலாம்.
இங்கு அறம், பொருள், இன்பம் இந்த மூன்றுக்கு பின்னாடியும் நல்ல மனசும், உழைப்பும், நேர்மையும் பொதுவாக இருப்பது புரிஞ்சுக்கலாம். இது எல்லாமே அரசியலுக்கும், ஆட்சி அதிகாரத்துக்கும் முக்கியமானதாகும். நேர்மையான நிர்வாகத்தையே ஒரு சிந்தாந்தமாக எடுத்துக் கொண்டது நமது தவெக.
அதனால் தான் நம் கட்சியுடைய முதல் தேர்தல் அறிக்கை கூட நேர்மையான உத்தரவாதம் என்று சொல்கிறோம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம், மற்றும் பலர் மாதிரி அள்ளி விடுகிற அவசர அறிக்கையும் இல்லை. திமுகவும் மற்றும் பலரும் ஒன்று தான் நாம் சொன்னோம். அது ஏன் என்று உங்களுக்கு புரிகிற மாதிரி ஒரே ஒரு காரணத்தை சொல்கிறேன்.
இரண்டு பேரும் விட்ட தேர்தல் அறிக்கையில் ஏதாவது ஒன்று இரண்டு பாயிண்ட் ஒரே மாதிரி இருந்தால் பரவாயில்லை. ஒருத்தர் ரூ.10,000 கொடுத்தால் இன்னொருத்தர் ரூ.8,000க்கு கூப்பன் கொடுக்கிறார். ஒருத்தர் ஃப்ரிட்ஜ் கொடுத்தால் இன்னொருத்தர் ஃப்ரிட்ஜ் வாங்க டோக்கன் கொடுக்கிறார்.
இரண்டு பேரும் மீனவர்களுக்கு ரூ.12,000 கொடுக்கிறார்கள், இரண்டு பேரும் பெண்களுக்கு ரூ.2,000 கொடுக்கிறார்கள். இப்படி இரண்டு பேரும் ஒரே தேர்தல் அறிக்கையை பெயரை மாற்றி கலரை மாற்றி தந்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் வேறு வேறு இல்லை, ஒரு குடையின் கீழ் இருக்கிற கொள்கை கூட்டம் தான். ஆனால், இந்த இரண்டு ஊழல் கூட்டம் மாதிரி நாம் ஏமாற்ற மாட்டோம். நமக்கு மக்கள் தான் முக்கியம், அவர்கள் மனசு தான் முக்கியம், அவர்கள் வாழ்க்கை தான் முக்கியம்
எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதைமட்டுமே தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
வெற்றி மகளிர் திட்டம்: 60 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் ரூ.2500 வரவு வைக்கப்படும்.
ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்.
12-ஆம் வகுப்புவரை மாணவர்களின் இடை நிற்றலை தடுக்க மாணவர்களின் தாயாருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
12ஆம் வகுப்புக்குப் பிறகு பிஎச்டி வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கும் திட்டம்.
ஒவ்வொருவருக்கும் வருடாந்திர உடல் பரிசோதனை, மலிவு விலை மருந்துகள் வழங்கப்படும்.
29 வயதுக்கு மேல் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.4000, பிளஸ்டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்.
ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்கும்.
அனைத்து மாவட்டங்களிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்கும் உண்டு உறைவிடப்பள்ளிகள்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்.
குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சத்துக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.
ஏஐ மூலம் இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.3500 வழங்கப்படும்.
கரும்புக்கு டன்னுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.4500 வழங்கப்படும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.18,000ஆக உயர்த்தப்படும்.
உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
Hindusthan Samachar / vidya.b