ஆயிரம் விளக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் - பாஜக நபரிடம் ரூ.21 ஆயிரம் பறிமுதல்
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை நகரின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்துள்ளனர். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் பணப்பட்டுவா
பணம் பறிமுதல்


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை நகரின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை சோதனை செய்ததில், அவரிடம் இருந்து ரூ.21 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், அவர் பாஜகவைச் சேர்ந்த முத்துநாம் குமார் என்பது தெரியவந்தது. மேலும், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதிக்காக பணப்பட்டுவாடா செய்ய இந்த தொகை பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, விதிமுறைகளை மீறியதாக கருதி முத்துநாம் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை கோடம்பாக்கம் போலீசார் அவரை காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக பணப்பட்டுவாடா மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam