Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு குறித்து திமுக மீது பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செயல்முறையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக சுமார் 50% அளவில் மக்களவைத் தொகுதிகள் உயர்த்தப்பட்டுள்ளன.
எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறைக்கப்படவில்லை. இருந்தபோதிலும், இதை தவறாக விளக்கி திமுக பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், மகளிருக்கான 33% இடஒதுக்கீடு என்பது கடந்த 30 ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் நடைபெற்று வந்த நீண்டகால போராட்டத்தின் பலன் என அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டம் அமல்படுத்தப்படுவது பெண்களின் அரசியல் பங்குபற்றலை அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகும் என்றும் கூறினார்.
ஆனால், இந்த வரலாற்றுச் சட்டம் நடைமுறைக்கு வருவதை தடுக்கவே திமுக முயற்சித்து வருகிறது.
பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் இந்த முயற்சியை அரசியல் நோக்கில் எதிர்த்து வருகிறது என அவர் குற்றம்சாட்டினார்.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு குறித்து மக்களை தவறாக வழிநடத்தும் பிரச்சாரங்களை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும், உண்மையை வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ