வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை அங்கம் வகிக்க
Cases filed against former ministers


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும்.

இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே முக்கிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பரப்புரைகளால் சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், வேட்பாளர்கள் தங்களது முழுமையான சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அதேபோல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாக்கல் செய்த வேட்புமனுவிலும் சொத்து விவரங்கள் முறையாக வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தனியே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின் முடிவுகள் தேர்தல் சூழ்நிலையிலும், அரசியல் தரப்புகளிடையேயான குற்றச்சாட்டுகளிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b