Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 ஏப்ரல் (ஹி.ச.)
2026 சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக, ரூ.50,000 வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.23 கோடி ரொக்கப்பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (17.04.2026) வரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ளார்:
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கம்: ரூ.1,23,00,518
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு: ரூ.16,12,162
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு: ரூ.5,62,282
தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கவும், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b