Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 17 ஏப்ரல் (ஹி.ச.)
மனைவியை பராமரிப்பது கணவனின் முதன்மையான மற்றும் தொடர்ச்சியான கடமையாகும் என்று சுப்ரீம் கோர்ட்டு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனைவிக்கு உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணமான ஒரு ஆண்டுக்குள் அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து, கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்குமாறு அந்த பெண் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மாதம் ரூ.8 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.
இந்த தொகையை அதிகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உத்தரகாண்ட் ஐகோர்ட்டு, பராமரிப்பு தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தியது.
இந்த நிலையில், வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடாக வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மனைவியின் தேவைகள் மற்றும் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு, மாதாந்திர பராமரிப்பு தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டது.
மேலும், மனைவியை பராமரிப்பது கணவரின் தவிர்க்க முடியாத கடமை என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தினர்.
ஜீவனாம்சம் என்பது ஒரு மாயையாக இருக்கக்கூடாது என்றும், மனைவி கணவருடன் வாழ்வதற்கு தேவையான சூழ்நிலையை உருவாக்குவது கணவரின் பொறுப்பு என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA