மதுரை கள்ளழகர் கோவிலில் இன்று சித்திரைத் திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம்
மதுரை, 17 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை மாவட்டத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் திருக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரைத் திருவிழா மிக முக்கியமானதாகும். அந்த வகையில
Kallazhagar Temple


மதுரை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை மாவட்டத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் திருக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரைத் திருவிழா மிக முக்கியமானதாகும்.

அந்த வகையில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர்.

இத்தகைய சிறப்புப் பெற்ற இவ்விழா வரும் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் ஊன்றும் கொட்டகை முகூர்த்த விழா கள்ளழகர் திருக்கோயிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆயிரம் பொன்சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதற்காக அழகர் கோயிலில் உள்ள நூபுரகங்கையில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கோயில் நுழைவு வாயிலில் முகூர்த்தகால் நடப்பட்டது.

கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடப்பட்டதைத் தொடர்ந்து கள்ளழகர் மதுரை வரும்போது எழுந்தருளும் அனைத்து மண்டகப்படிகளிலும் இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து வரும் 27-ம் தேதி மீனாட்சி அம்மனுக்குப் பட்டாபிஷேகமும், 28-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், சிகர நிகழ்ச்சியாகத் திருத்தேரோட்டம் வரும் 29-ம் தேதியும் நடைபெறுகிறது.

Hindusthan Samachar / vidya.b