காதல் விவகாரத்தில் 15 வயது சிறுமி தற்கொலை - தாய், மகன், மகள் கைது
திருப்பத்தூர், 17 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சக்கரகுப்பம் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்
தற்கொலை


திருப்பத்தூர், 17 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சக்கரகுப்பம் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த ரஜினி – கோமதி தம்பதியினருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்களின் இளைய மகள் தர்சினி (15), அண்டை வீட்டில் வசிக்கும் செங்குட்டுவன் மகன் நித்தின் (19) என்பவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு இரு குடும்பங்களுக்கும் தெரிய வந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நித்தின் தாய் ரேவதி மற்றும் அவரது மகள் இலக்கியா ஆகியோர், தர்சினியின் வீட்டிற்குள் புகுந்து “என் மகனை காதலிக்க உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று கேட்டு, தர்சினி மற்றும் அவரது தாய் கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சிறுமிக்கு முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தர்சினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பிணவரை முன்பு சிறுமியின் தந்தை கதறி அழுத சம்பவம் காண்போரைக் கண்கலங்க செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ரேவதி, அவரது மகன் நித்தின் மற்றும் மகள் இலக்கியா ஆகிய மூவரையும் ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் விவகாரம் காரணமாக வீடு புகுந்து தாக்கியதில் ஏற்பட்ட மன உளைச்சலால் சிறுமி தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P