Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 17 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் துணை வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அம்மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதற்கு எதிராக பலரும் மேல்முறையீடு செய்தனர். அந்த முறையீடுகளை விசாரிக்க முன்னாள் மற்றும் தற்போதைய நீதிபதிகள் தலைமையில் 19 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.
இந்த தீர்ப்பாயங்களில் பலர் தேவையான ஆவணங்களுடன் முறையீடு செய்தனர்.
இதில் கணிசமானோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அவர்களின் பெயர்களை சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் வெளியிடுமாறு சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மேலும், மாநிலத்தில் வருகிற 23 மற்றும் 29-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 21 அல்லது 27-ந்தேதிக்குள் தீர்ப்பாயங்கள் வழங்கும் தீர்ப்புகளின் அடிப்படையில் பெயர்கள் சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியது.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், சிறப்பு மறு ஆய்வு செயல்முறையின் கீழ் முதல் துணை வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, வாக்காளர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் அல்லது மாவட்ட மற்றும் துணைப் பிரிவு அலுவலகங்களில் நேரடியாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் வெளியீட்டிற்கு பிறகு எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களும் ஏற்படாத வகையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA