Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 17 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிர மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை காந்திநகர் பகுதியில் காதல் தொல்லை தொடர்பான முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் இளைஞர் மீது இந்த தாக்குதல் நடைபெற்றதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
உபதலை கக்கன் நகர் பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவரின் மகன் வினி ஆண்டோ (22), தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் காந்திநகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்களுடன் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் திடீரென கடுமையான மோதலாக மாறியுள்ளது.
இதில், மாணவியின் தந்தையான ரவிசந்திரன் (47) மற்றும் அவரது மகன் செபிலேஸ் (17) இணைந்து வினி ஆண்டோவை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது கத்தியால் வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குத்தப்பட்டதால் வினி ஆண்டோ கடுமையாக காயமடைந்தார். சம்பவத்தை பார்த்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே காட்டேரி பகுதியில் வினி ஆண்டோ உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து அருவங்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் தொல்லை தொடர்பான பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பதையும் காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN