தேர்தல் விதிமுறை மீறல் - ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவு மீது வழக்குப்பதிவு
நெல்லை, 17 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சபாநாயக
Appavu


நெல்லை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, நேற்று இரவு (ஏப். 16) வள்ளியூரில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு, இரவு 10 மணிக்கு மேல் 18வது வார்டுக்கு உட்பட்ட குமார புதுக்குடியிருப்பு பகுதியில் பிரச்சாரத்திற்காக சென்றார்.

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் சூழலில், சபாநாயகரே விதியை மீறுவதாக கூறி, மக்கள் அவரிடம் வாக்குவாதம் செய்ய தொடங்கினர். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு எதுவும் செய்யாத நீங்கள், இரவு 10 மணிக்கு மேல் ஆதரவாளர்கள் புடை சூழ எப்படி எங்கள் ஊருக்குள் ஓட்டு கேட்டு வரலாம்? எனக் கேள்வியெழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த சபாநாயகரின் ஆதரவாளர்கள், ஊர் மக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் மக்களின் எதிர்ப்பு வலுக்கவே, சபாநாயகர் அப்பாவு, பிரச்சாரம் செய்யாமலேயே அங்கிருந்து புறப்பட்டார்.

ஏற்கனவே அம்பலவாணபுரம், ஆவரை குளம் பகுதியில் சபாநாயகர் அப்பாவு பிரச்சாரம் செய்ய சென்றபோது, இளைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். எந்த திட்டங்களையும் தங்களுக்கு முறையாக நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

இதனால் கோபமடைந்த அப்பாவு, ஓட்டு போட்டால் போடு, இல்லாவிட்டால் போ. என்னை பிரச்சாரம் செய்யவேண்டாம் என்று கூறுவதற்கு உனக்கு உரிமை இல்லை என்று ஆவேசமாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ராதாபுரம் தொகுதியில் அப்பாவுவை எதிர்த்து, பாஜக சார்பில் செட்டிக்குளத்தைச் சேர்ந்த பண்ணை பாலகிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு அந்த பகுதி மக்களிடையே செல்வாக்கு அதிகம் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்த இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாகவும், பொது மக்களுடன் கட்சி கொடிகளுடன் நின்று பேசியதாலும் பெறப்பட்ட புகாரின் பேரில் அப்பாவு மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN