சுற்றுலா சென்ற ஜீப்பில் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
திண்டுக்கல், 17 ஏப்ரல் (ஹி.ச.) கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற ஜீப்பில் இருந்த துப்பாக்கியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். வரும் 23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்
Thuppakki


திண்டுக்கல், 17 ஏப்ரல் (ஹி.ச.)

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற ஜீப்பில் இருந்த துப்பாக்கியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

வரும் 23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில்ண தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுவதால் இந்தியாவே உற்றுநோக்கும் தேர்தலாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மாறியுள்ளது. மற்றொருபுறம், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலின் நுழைவுவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தென்காசி மாவட்டம், மாவலூர் பகுதியில் இருந்து வந்த ஜீப்பை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும் அந்த ஜீப் நிற்காமல் சென்றுள்ளது.

காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த ஜீப்பை பின் தொடர்ந்து துரத்திப் பிடித்தனர். அப்போது ஜீப்பை முழுவதுமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஜீப்பில் துப்பாக்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஜீப்பில் பயணம் செய்த நான்கு இளைஞர்களைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ஜீப் மற்றும் துப்பாக்கியை காவல் துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

Hindusthan Samachar / ANANDHAN