130 பேரை ஏமாற்றிய ரூ.80 லட்சம் நிதி மோசடி- தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை
கோவை, 17 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 130 பேரை ஏமாற்றிய வழக்கில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவை தனி நீதிமன்றம் இன்று தீர
Cbe


கோவை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 130 பேரை ஏமாற்றிய வழக்கில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவை தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது.

சிட் ஃபண்ட்' பெயரில் மோசடி

தர்மலிங்கம் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் இணைந்து ‘ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ்’ மற்றும் ‘அருள்மிகு வெற்றி முருகன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். தமிழகத்தின் 18 முக்கிய நகரங்களில் கிளைகளைத் தொடங்கி, கவர்ச்சிகரமான வட்டி மற்றும் சேமிப்புத் திட்டங்களை அறிவித்தனர்.

இதை நம்பி முதலீடு செய்த சுமார் 130 முதலீட்டாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.80,57,861 வைப்புத் தொகையாகப் பெறப்பட்டது. ஆனால், முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அசல் மற்றும் வட்டித் தொகையைத் திருப்பித் தராமல் உரிமையாளர்கள் மோசடி செய்து உள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக கோவை TNPID (Tamil Nadu Protection of Interests of Depositors) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி செந்தில்குமார் இறுதித் தீர்ப்பை வழங்கினார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் C. கண்ணன் ஆஜராகி வாதாடினார்.

குற்றம் சாட்டப்பட்ட தர்மலிங்கம் மற்றும் கணேசன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, TNPID சட்டம் (பிரிவு 5) 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை,

IPC 420 (மோசடி) 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, IPC 120-b (சதித்திட்டம்) 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

IPC 406 (நம்பிக்கை துரோகம்) 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என சிறைத் தண்டனையுடன் சேர்த்து, இருவருக்கும் மொத்தம் ரூ.93,80,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை வசூலித்து, பாதிக்கப்பட்ட 130 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

10 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைத்து உள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN