Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் (PMLA) வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனத் திமுக எம்.பி. இரா. கிரிராஜன் தாக்கல் செய்த மனுக்கள், வரும் திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
இந்த மனுக்களில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சேலம் இளங்கோவன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா ஆகியோருக்கும் எதிராக தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுவில் கூறப்பட்டதாவது:
சாலைகள் அமைத்தல், எல்.இ.டி. விளக்குகள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளில் முறைகேடு நடைபெற்றதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ