மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க முயன்ற போலீஸார் மீது தாக்குதல்
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி(50) மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி சென்று சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட இருச்சக்கர வாகன ஓட்டி உடனே ரெட்டி குப்பம்
தாக்குதல்


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி(50) மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி சென்று சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட இருச்சக்கர வாகன ஓட்டி உடனே ரெட்டி குப்பம் சாலை சீனிவாச தியேட்டர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்பெஷல் டீம் உதவி ஆய்வாளர் சதாசிவம் மற்றும் ரோந்து வாகன ஓட்டுநர் பாலாஜி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது உதவி ஆய்வாளர் சதாசிவம் உள்ளிட்ட காவலர்கள் அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர் திருப்பதியை சோதனை செய்த போது அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

உடனே போலீசார் ஆட்டோ சாவியை எடுக்க முயன்ற போது ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி சாவியை கொடுக்காமல் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

உடனே போலீசார் திருப்பதியை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி உதவி ஆய்வாளர் சதாசிவம் கையை கடித்து ரகளையில் ஈடுபட்டதால் உதவி ஆய்வாளர் சதாசிவம் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் குமரன் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ரோந்து வாகன ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர் திருப்பதியின் குடும்பத்தினர் மற்றும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் சம்பவயிடத்தில் ஓன்று கூடி போலீஸாருக்கு எதிராக ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஜானகி (கர்ப்பிணி) ரோந்து வாகன ஓட்டுனரான காவலர் கார்த்திக்கை தகாத வார்த்தையில் பேசி சட்டையை பிடித்து இழுத்து கையால் தாக்கியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது காவலர் கார்த்திக் கர்ப்பிணி பெண்ணான ஜானகியை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி உறவினர்கள் மற்றும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் ரெட்டி குப்பம் சாலையில் அமர்ந்து போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே தகவல் அறிந்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனிவாசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam