தேர்தல் பணிமனை வழக்கு- தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச) அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களிலேயே அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரவக்குறிச
High court


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச)

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களிலேயே அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஆர். இளங்கோவின் பிரதிநிதி முத்துக்குமார பார்த்திபன் தாக்கல் செய்த இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது,

குறுகிய காலத்திற்கு தேர்தல் பணிக்காக நிரந்தர கட்டிடங்களை பெறுவது சாத்தியமில்லை” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், மக்கள் பாதுகாப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை தன்னிச்சையானவை என்று கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களை உள்ளடக்கிய அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தான் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்ததை நீதிமன்றம் பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சட்டபூர்வமானது என்றும், அதில் தலையிடத் தேவையில்லை என்றும் கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Hindusthan Samachar / P YUVARAJ