Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 18 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியில் பட்டாக்கத்தியுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.
ஆர்.எம்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த விமல் என்பவர் மீது கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, கஞ்சா விற்பனை குறித்த புகாரின் அடிப்படையில் சிறைக்கு சென்ற அவர், ஒரு வாரத்திற்கு முன்பு தான் விடுதலையாகி வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு விமல் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் அவரது கையில் வெட்டிக் காயப்படுத்தி தப்பிச் சென்றனர். ஆனால், இந்த தாக்குதல் குறித்து விமல் காவல்துறையில் புகார் அளிக்காமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
தன்னை தாக்கியவர்கள் மற்றும் தன்னை சிறைக்கு அனுப்பியவர்கள் மீது பழி தீர்க்க விமல் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், நேற்று இரவு விமல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆறு பேர் கொண்ட கும்பலாக, மூன்று இருசக்கர வாகனங்களில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்தனர்.
அவர்கள், டைசன் என்ற நபர்தான் தன்னை தாக்க வைத்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை தேடி சென்றுள்ளனர். டைசன் கிடைக்காத நிலையில், சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை, நீங்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தான் நான் சிறைக்கு சென்றேன்” என்று கூறி திட்டியதோடு, கத்தியால் இரு பேரை வெட்டியுள்ளனர்.
மேலும், மீண்டும் போலீசில் புகார் கொடுத்தால் நாளை மீண்டும் வந்து வெட்டுவேன்” என மிரட்டியும் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குப் பிறகு, டைசன் வீட்டிற்குச் சென்ற கும்பல், அவரை வெளியே வரச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பட்டாக்கத்தியால் வீட்டுப் பொருட்களை சேதப்படுத்தியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதேபோல், சாலையில் கத்தியுடன் கலாட்டா செய்த காட்சிகளும் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசில் புகார் அளிக்கப்படாத நிலையில், வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு பெருங்களத்தூர் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P