Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.
அவருக்கு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை முதலே போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.
பழனிசெட்டிபட்டி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மக்கள் மத்தியில் பேசிய அவர் கூறியதாவது,
திமுகவில் இணைத்து என் வாழ்நாளை உருவாக்கி தந்த மு.க ஸ்டாலினுக்கு நான் எந்நாளும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
ஏழை எளிய மக்களுக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து கொடுத்து கடந்த 5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்குகிற ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான்.
இந்த தேர்தல் முடிந்தவுடன் 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனை வைத்து நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 5ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்ட காலை உணவானது இனிமேல் 8ஆம் வகுப்பு வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் நகராட்சிக்கு இணையாக பல கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10 பேரூராட்சிகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியும் ஒன்று. அடுத்த திமுக ஆட்சியில் தொகுதி மக்களின் விடுபட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.
Hindusthan Samachar / vidya.b