புனே விமான நிலையத்தில் ஓடுபாதை தற்காலிகமாக நிறுத்தம் - சென்னை, புனே சேவை பாதிப்பு
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில், நேற்று இரவு ஐஏஎப் விமானம் ஒன்று, தரையிறங்கும் போது, திடீரென அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலைய ஓடுபாதை சேதம் அடைந்துள்ளது. இதை அடுத்து புனே விமான
Chennai International Airport


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில், நேற்று இரவு ஐஏஎப் விமானம் ஒன்று, தரையிறங்கும் போது, திடீரென அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலைய ஓடுபாதை சேதம் அடைந்துள்ளது.

இதை அடுத்து புனே விமான நிலைய ஓடுபாதை, நேற்று இரவில் இருந்து, தற்காலிகமாக செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து இரவு 10.05 மணிக்கு, 162 பயணிகளுடன் புனே புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புனேவில் தரை இறங்க முடியாமல், மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதைப்போல் நேற்று இரவு 10.30 மணிக்கு, சென்னையில் இருந்து 148 பயணிகளுடன், புனே புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்,புனே விமான நிலைய ஓடுபாதை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தகவல் கிடைத்தால், அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டது.

அதோடு சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1.10 மணி, 3.10 மணி, 4.50 மணிக்கு புனே செல்ல வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதைப்போல் இன்று அதிகாலை

5.20 மணிக்கு, புனே செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதோடு புனேவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 5 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதைப்போல் சென்னை- புனே- சென்னை இடையே, இயக்கப்படும் 11 விமான சேவைகள் திடீரென பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில் திடீரென, விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்தும், இதனால் சென்னை- புனே- சென்னை இடையே, விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து, பயணிகளுக்கு முறையான அறிவிப்புகளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் இன்று காலை வரையில் அறிவிக்கவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து, விமான நிறுவன கவுண்டர்களை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN