தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச) தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம் அனலாக மாறி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சி
Rahul Gandhi arrives in Chennai


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச)

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம் அனலாக மாறி வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (18.04.2026) சென்னை வருகை தந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்பாளராக செயல்பட்டு வரும் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வரவேற்றனர்.

சென்னை வந்துள்ள அவர், இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக பொன்னேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

அவரது வருகையை முன்னிட்டு தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெருஞ்சேரி பகுதியில் சுமார் 20,000 பேர் அமரக்கூடிய வகையில் பெரிய பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 12 மணியளவில் பொதுக்கூட்ட மேடைக்கு வரவுள்ள ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் துரை சந்திரசேகருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி அளவில் சோளிங்க தொகுதிக்கு உட்பட்ட பாண்டியநல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் பைபாஸ் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

இந்த பரப்புரையை முடித்துக் டெல்லி செல்லும் ராகுல் காந்தி மீண்டும் வரும் 20-ம் தேதி ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b