இலங்கை கடல் பகுதியில் ரூ.200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்
ராமநாதபுரம், 18 ஏப்ரல் (ஹி.ச.) இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து பணியின் போது பெருமளவு ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியா
Heroin


ராமநாதபுரம், 18 ஏப்ரல் (ஹி.ச.)

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து பணியின் போது பெருமளவு ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடலில் ரோந்து சென்ற கடற்படையினர், சந்தேகத்துக்கிடமாக சென்றுகொண்டிருந்த ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்தப் படகின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பொட்டலங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தன.

அந்த பொட்டலங்களை திறந்து பார்த்தபோது, அவற்றில் ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 161 கிலோ எடையுடைய ஹெராயின் அந்த படகில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, கடல் வழியாக நடைபெறும் கடத்தல் நடவடிக்கைகளின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து, அந்த படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த நான்கு பேரை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை தொடர்ந்து விசாரணைக்காக டிக்கோவிட்டா துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை அறிய அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், இந்த ஹெராயின் பொருட்கள் தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக இலங்கை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து தகவல் சேகரித்து வருகின்றன.

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது குறித்து ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கைகள் இருந்த நிலையில், இந்த சம்பவம் அதனை மீண்டும் உறுதி செய்யும் வகையில் உள்ளது.

இந்த பறிமுதல் சம்பவம் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / ANANDHAN