Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கோவை கொடிசியா மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ள நிலையில் பொதுக்கூட்ட மேடை மற்றும் பொதுமக்கள் அமரும் இடம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் கண்ணன் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரிடம் ஆலோசனையும் நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,
கோவை எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு பிறகு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அது அதிமுக ஆட்சி அமைப்பதற்கு மேலும் வலு சேர்க்கும் என்றும் திமுகவினர் என்ன மாதிரியான பரிசுப் பொருட்கள் கொடுத்து வாக்கு கேட்டாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எளிமையான வேட்பாளரான அம்மன் அர்ஜுனன் வெற்றி பெறுவது உறுதி என்றும் அது மட்டுமின்றி கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் மீண்டும் அதிமுக வென்றெடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam