Enter your Email Address to subscribe to our newsletters

பட்டுக்கோட்டை, 18 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை, அதன் கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளுக்காகப் புகழ்பெற்றது. நாடியம்மன் கோயில் பட்டுக்கோட்டையின் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறது.
சுமார் மூன்று தலைமுறைகளாக அம்மன் சிலை வளர்ந்து கொண்டே இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான கற்கோயிலான கோட்டை சிவா கோவிலின் சிற்பங்கள் சோழர் கால கலைக்குச் சான்றாக உள்ளன.
முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ள பொது ஆவுடையார் கோயிலின் தனிச்சிறப்பு, கருவறையில் அம்மன் இல்லாமலும், சிவலிங்கம் பெண் வடிவிலும் இருப்பதுதான்.
பட்டுக்கோட்டைக்கு அருகில் சரபேந்திரராஜபட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள எண்கோண வடிவ கோபுரமான மனோரா, மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், நெப்போலியனை வென்ற வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது.
'மக்கள் கவிஞர்' என்று போற்றப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவாக வட்டாட்சியர் அலுவலகம் அருகே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர் தென்னை சாகுபடிக்கு மிகவும் பெயர் பெற்றது. இப்பகுதி விவசாயிகள் தென்னை மூலம் பல மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
அருகிலுள்ள அதிராமபட்டினம் கடற்கரை மற்றும் மீன்பிடித் தொழில் இப்பகுதியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வாக்காளர்கள் எண்ணிக்கை:
ஆண்கள் - 1,15,354
பெண்கள் - 1,25,580
மூன்றாம் பாலினத்தவர் - 20
மொத்தம் - 2,40,954
பட்டுக்கோட்டை தொகுதியில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என 2 நகராட்சிகள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த தொகுதியில் முஸ்லிம்கள், முத்தரையர்கள், முக்குலத்தோர், வேளாளர், பட்டியலினத்தவர், யாதவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
அரசியல் நிலவரம்:
இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கங்கிரஸ் 5 முறையும், அதிமுக, திமுக தலா 4 முறையும், பிரஜா சோசலிச கட்சி 2 முறையும், தமாகா ஒரு முறையும் வென்றுள்ளன.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.அண்ணாதுரை 79,065 வாக்குகளை பெற்று எம்எல்ஏவானார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர்.ரங்கராஜன் 53,796 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
சுயேச்சையாக போட்டியிட்ட பாலகிருஷ்ணன் 23,771 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கீர்த்திகா அன்பு 10,730 வாக்குகளும், அமமுக சார்பில் போட்டியிட்ட எஸ்டிஎஸ்.செல்வம் 5,223 வாக்குகளும் பெற்றனர். இந்த முறை திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான கா.அண்ணாதுரை மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் கண்ணன், தவெக சார்பில் மதன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். திமுக வேட்பாளர் அண்ணாதுரை, திமுக அரசின் நலத்திட்டங்களையும், முஸ்லிம்கள் வாக்குகளையும் நம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர் கட்சி நிர்வாகிகளை அனுசரித்து செல்வதில் என்று புகார் எழுந்ததால், இவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அதிருப்தியாளர்களை சரிகட்டி தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதேபோல, அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர் கடந்த அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், திமுக வாக்குறுதியாக அளித்து நிறைவேற்றாத திட்டங்களை விமர்சித்தும் வாக்குச் சேகரித்து வருகிறார்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் போட்டி கடுமையாக உள்ளது. இவர்களுடன் நாதக, தவெக வேட்பாளர்களும் தங்களது பாணியில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்தும், வாக்காளர்களை சந்தித்தும் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்புகள்:
பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சாலை வசதி,
கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் குட்ஷெட் மீண்டும் உருவாக்க வேண்டும்.
கண்ணனாறு உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களை தூர் வார வேண்டும்.
மதுக்கூரை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b