பெண்களின் குரலை அடக்குகிறார்கள் – திமுக, காங்கிரஸ் மீது தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பாஜக மாநில தலைமையகம் கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜக முன்னாள் மாநில தலைவர் மற்றும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
Tamilisai


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பாஜக மாநில தலைமையகம் கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜக முன்னாள் மாநில தலைவர் மற்றும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

அப்போது பேசிய அவர்,

பெண்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

பெண்கள் அரசியலில் அதிகமாக பங்கேற்று, நாடாளுமன்றத்தில் தங்களது உரிமைகளை வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாமல் பெண்களின் வாய்ப்புகளை தடுக்க முயற்சிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழக முதலமைச்சர் பெண்களின் தோல்வியை கொண்டாடி வருகிறார். இந்த தேர்தலில் இந்திய கூட்டணிக்கு எதிராக பெண்களின் வாக்கு முழுவதும் எதிரொலிக்க வேண்டும். பெண்களின் கூடுதல் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.

இதுதான் அவர்களின் வெற்றியா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

கருப்பு கொடி எதிர்ப்பின் அடையாளம் என கூறியுள்ள கனிமொழியின் கருத்தை சுட்டிக்காட்டிய தமிழிசை, டாஸ்மாக் கடைகள் குறித்து முன்னதாக கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியவர்கள் தற்போது அதைப் பற்றி பேசாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “பெண்களின் உரிமைகளை பறித்துவிட்டு அதையே தமிழகத்தின் வெற்றி என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்” என்றும் அவர் விமர்சித்தார்.

தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஆகியவற்றை ஒன்றாக இணைத்து எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுபவர்களை விமர்சித்த அவர், தங்களது ஆட்சிக்காலங்களில் ஏன் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டங்களை கொண்டு வரவில்லை?” என எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில், நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்த ராஜராஜ சோழன் குறித்த கருத்துக்கும் தமிழிசை பதிலளித்தார். “கமல்ஹாசன் சில நேரங்களில் அவரே வசனங்களை உருவாக்கிக் கொண்டு பேசுகிறார். ராஜராஜ சோழன் காலத்தில் நடந்த குடமுழுக்கு முறையாக நடந்தது. தற்போதைய நிகழ்வுகளை அதனுடன் ஒப்பிட முடியாது” என்றார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த நாள் மாலை மைலாப்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாகவும், அப்போது இரண்டு பெண் வேட்பாளர்களுடன் இணைந்து பிரச்சாரம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் தமிழக வருகைகள் தேர்தலில் பாஜகக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ