Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 18 ஏப்ரல் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் உணவக சேவை குறைபாடு தொடர்பாக ஒரு முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.
5 நிமிடங்களில் உணவு” என்ற விளம்பரத்தை நம்பி குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்ற ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், பின்னர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்காகி நஷ்டஈடு வழங்கும் நிலை உருவாகியுள்ளது.
பாளையங்கோட்டை மகாராஜ நகரைச் சேர்ந்த தங்கதுரை என்ற வழக்கறிஞர், கடந்த 16.04.2025 அன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் Urban Dhaba என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது குழந்தைகள் பசியுடன் இருந்ததால், 2 பிரெட் ஆம்லெட் மற்றும் காபி ஆர்டர் செய்து மொத்தம் ₹420 கட்டணம் செலுத்தியுள்ளார்.
ஆனால் ஆர்டர் செய்த உணவு விரைவாக வழங்கப்படாமல், சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட நேரம் காத்திருந்த பிறகு வழங்கப்பட்ட 2 பிரெட் ஆம்லெட்டுகளும் கருகி சாப்பிட முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டபோதும் உடனடியாக பதில் கிடைக்காமல் மீண்டும் காத்திருக்க வைத்துள்ளனர். பின்னர் வழங்கப்பட்ட மாற்று உணவும் தரம் குறைந்ததாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறையான பில் வழங்காமல் “GST” என்ற பெயரில் ₹20 கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தங்கதுரை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர், வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி, உணவகத்தின் செயல்பாட்டில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை உறுதி செய்தனர்.
குறிப்பாக கருகிய உணவு வழங்கியதும், தேவையற்ற தாமதம் செய்ததும், சரியான பில் வழங்காததும் ஆகியவை சேவை குறைபாடு எனத் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில், மன உளைச்சலுக்காக ₹5,000 மற்றும் வழக்குச் செலவிற்காக ₹5,000 என மொத்தம் ₹10,000 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் ஆண்டுக்கு 9% வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN