கடலூரில் நாளை திட்டமிடப்பட்டிருந்த விஜய் பிரச்சாரம் ரத்து
கடலூர், 18 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் பிரச்சாரத்தில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடலூரில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சார கூட்டம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடலூருக்கு
விஜய்


கடலூர், 18 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் பிரச்சாரத்தில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடலூரில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சார கூட்டம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடலூருக்கு விஜய் வருவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் அவர் கடலூருக்கு செல்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டிருந்தன. ஆனால் திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே கடலூரில் நடைபெற இருந்த அவரது பிரச்சார கூட்டம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இது மூன்றாவது முறையாக ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ரத்துக்கான காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ளிட்டவைகள் கூறப்படுகின்றன. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முக்கிய பகுதிகளில் நடைபெற உள்ள பிரச்சாரங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அரசியல் ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, நேரடி கூட்டங்களுக்கு பதிலாக வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பை அதிகரிக்க கட்சியினர் முயற்சி மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P