தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ராட்சத பலூன் பறக்கவிட்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி, 18 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராட்சத பலூன் அம்மாவட்ட புதிய பேருந்து
giant balloon to emphasize 100% voter turnout


திருநெல்வேலி, 18 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராட்சத பலூன் அம்மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் இன்று பறக்கவிடப்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் இந்த விழிப்புணர்வு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஜனநாயகக் கடமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைவரிடமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா என்ற மாவட்டத்தின் தேர்தல் இலச்சினையுடன், 100% தவறாமல் வாக்களிப்போம் வாரீர், தேர்தல் நாள் ஏப்ரல் 23, எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை ஆட்சியர் இரா.சுகுமார் பறக்கவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும் பேருந்து நிலையப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குத் தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்வின் இறுதியில், தேர்தலில் கட்டாயம் வாக்களிப்போம் என்பது தொடர்பான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) லதா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b