Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச)
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைக்கு திட்டமிட்டே இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக அக்கட்சி தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.
திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.
தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது.
இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.
தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.
கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.
பவள விழா பாப்பா…
என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி.
Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி.
மக்களே…
இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b