Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச)
கரூர் மாவட்டம் குளித்தலையில், வீட்டின் வெளியே துணிகளை உலர வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், மது போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி வருகின்றன.
குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களை காப்பாற்றுவதில்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது.
இதன் விளைவாக, சமூக விரோதிகளுக்கு சட்டம் மற்றும் காவல்துறையின் மீதான பயம் குறைந்து, வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் மீது அத்துமீறல் நடத்தும் அளவுக்கு சூழ்நிலை மோசமடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பங்கள் அச்சத்தில் வாழும் நிலை உருவாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமெனில், அரசின் செயல்பாடுகளில் மாற்றம் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையிலே, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என மக்களிடம் அவர் அழைப்பு விடுத்தார்.
நமது வீட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டியது அவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் குற்றச்சாட்டுகள், மாநில அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ