Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை மற்றும் (ஏப்ரல் 20 ) நாளை மறுநாள் (ஏப்ரல் 21) தேதிகளில் தமிழகம் முழுவதும் இரண்டு நாள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நாளை கோவை நகரில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
அதன்பின்னர், ஓசூர் மற்றும் தளி ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து, அங்கு நடைபெறும் மற்றொரு பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார். மாலையில் சென்னை வந்தடையும் அவர், ஆவடி பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டமான ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
நாளை மறுநாள் மதுரை செல்லும் சந்திரபாபு நாயுடு, அங்கிருந்து சாத்தூர் சென்று சமூகத் தலைவர்களைச் சந்திப்பதுடன், பிரச்சார நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அன்று மாலையில் அவரின் இப்பிரச்சாரப் பயணம் நிறைவடைகிறது.
Hindusthan Samachar / vidya.b