Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் பட்டியலில் இவர் பெயர் 16-வது இடத்தில் வருகிறது.
ஆனால், 'நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வசதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள துண்டுப் பிரசுரத்தில் 'நோட்டா' என்பது 16-வது இடத்தில் இருந்துள்ளது. இது பெரம்பூர் தொகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது,
சில ஆண்டுகளுக்கு முன்பு 'நோட்டா' வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, வாக்குப் பதிவு இயந்திரத்தின் கடைசி (16-வது) பட்டன் 'நோட்டா' என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்களை தேர்தல் ஆணையம் அச்சிட்டது. அதை தவறுதலாக எடுத்து யாரோ தற்போது விநியோகம் செய்துள்ளனர்.
ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும்.
அதற்கு மேல் வேட்பாளர் இருந்தால், 2-வது வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். அந்த வகையில், பெரம்பூரில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், மொத்தம் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளரான தவெக தலைவர் ஜோசப் விஜய் பெயரின் முதல் எழுத்தான ஜோ. தமிழ் அகர வரிசையின் இறுதியில் வருவதால், பட்டியலில் அவரது பெயர் 16-வதாக உள்ளது.
பெரம்பூரை பொருத்தவரை, 3-வது இயந்திரத்தின் கடைசி பட்டன் நோட்டாவாக இருக்கும். 15-க்கும் குறைவாக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் தான் நோட்டா 16-வது இடத்தில் இடம்பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b