சின்னசேலம் அருகே மீன்பிடி திருவிழா கோலாகலம்
கள்ளக்குறிச்சி, 19 ஏப்ரல் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா கிராம மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய நிகழ்வாக அமைந்தது. இந்த பகுதியில் உள்ள பெரிய ஏரி, மழைக்காலங்களில் நீரை சேமித்து
Meenpidi Thiruvizha


கள்ளக்குறிச்சி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா கிராம மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய நிகழ்வாக அமைந்தது.

இந்த பகுதியில் உள்ள பெரிய ஏரி, மழைக்காலங்களில் நீரை சேமித்து சுற்றியுள்ள பாசன நிலங்களுக்கு வழங்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் கோமுகி அணையிலிருந்து வந்த நீர் இந்த ஏரியில் சேமிக்கப்பட்டு, நமசிவாயபுரம், பங்காரம், கனியாமூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில் தற்போது ஏரியில் உள்ள நீர் அளவு குறைந்து வடியத் தொடங்கியதால், வழக்கம்போல் கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவை நடத்த முடிவு செய்தனர்.

அதிகாலை முதலே தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நமசிவாயபுரம், பங்காரம், கனியாமூர், தென்செட்டியனந்தல் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏரிக்கரையில் திரண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஒன்றுகூடி பாரம்பரிய முறையில் வலை வீசி மீன்பிடியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் கெளுத்தி, கெண்டை, விரால் உள்ளிட்ட பல வகையான மீன்கள் பிடிக்கப்பட்டன. மக்கள் குழுக்களாக பிரிந்து ஏரிக்குள் இறங்கி வலை வீசி மீன் பிடித்தனர். சிலர் கையால் பிடித்தும் மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வு ஒரு திருவிழா போன்று உற்சாகமான சூழலை உருவாக்கியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தனர்.

மீன்பிடி திருவிழா என்பது அந்த பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்.

இது மக்களுக்குள் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

ஏரியில் மீதமுள்ள நீர் முழுமையாக வடியும் முன்பு இந்த திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN