மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை கடும் உயர்வு
தூத்துக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகுகளில் பெரும்பாலானவை போதிய மீன்கள் கிடைக்காததால் குறைந்த அளவிலான மீன்களுடனேயே கரை திரும்பின. இருப்பினும், தற்போது கோடை விடுமுறை மற்றும் வார
Fishing Ban Period – Rise in Fish Prices


தூத்துக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகுகளில் பெரும்பாலானவை போதிய மீன்கள் கிடைக்காததால் குறைந்த அளவிலான மீன்களுடனேயே கரை திரும்பின.

இருப்பினும், தற்போது கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு மீன்களை வாங்கத் திரேஸ்புரம் துறைமுகத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. வரத்து குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருந்ததால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

அசைவப் பிரியர்களின் விருப்பமான வஞ்சிரம் எனப்படும் சீலா மீன் ஒரு கிலோ 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனையானது. இதேபோல் நண்டு ஒரு கிலோ 900 ரூபாய்க்கும், விளை, ஊழி மற்றும் பாறை ஆகிய ரக மீன்கள் தலா 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

சிறு வகை மீன்களான கிழவாலை, சூறை மற்றும் கேரை போன்றவை ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட்டன. சில்லறை விற்பனை தவிர்த்து கூடை கணக்கிலும் ஏலம் விடப்பட்டது; அதன்படி சாளை மீன் ஒரு கூடை 2,500 ரூபாய்க்கும், முண்டக்கண்ணி பாறை 2,000 ரூபாய்க்கும், வங்கனை மீன் 3,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

வரத்து மிகவும் குறைவாக இருந்த போதிலும், கோடை விடுமுறை காரணமாக பொதுமக்களின் தேவை அதிகரித்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதிலும், விலை உயர்ந்து காணப்பட்டதால் மீனவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்தனர்.

Hindusthan Samachar / vidya.b