Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 19 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வாடகை கார் மற்றும் வேன் ஓட்டுநர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளங்களுக்கு பயணிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
“மலைகளின் இளவரசி” என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கவும் இயற்கை அழகை ரசிக்கவும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மர காடுகள் போன்ற சுற்றுலா தளங்களுக்கு நுழைவு கட்டணம் தற்போது QR கோட் ஸ்கேன் மூலம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த முறையில், PhonePe, Google Pay, Paytm போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், அந்த பகுதிகளில் போதிய நெட்வொர்க் வசதி இல்லாததால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக விடுமுறை நாட்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், முன்பிருந்தபடி நேரடியாக கட்டணம் வசூலிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் வேன் ஓட்டுநர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் தாக்கமாக, வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் அருகிலுள்ள பிரையண்ட் பூங்கா மற்றும் நட்சத்திர ஏரி பகுதிகளில் அதிகமாக திரண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P