Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
மதுரை மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து பக்தர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18 முதல் 30 வரை 13 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று காலை மிதுன லக்கனத்தில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வு 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கோவில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு வெண்பட்டுகள் சுற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தங்கக் கொடி மரத்தில் சித்திரை திருவிழா உற்சவக் கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கொடி மரத்தின் முன்பாக மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பின்னர் சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு விதமான தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது், இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு 4 மாசி வீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
ஏப்ரல் 26 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 27 ஆம் தேதி திக் விஜயமும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 28 ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 29 ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
எப்ரல் 30 மீனாட்சி சுந்தரேசுவரர் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 27 முதல் மே 6 வரை 10 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது.
ஏப்ரல் 29 ஆம் தேதி தேதி மாலை 6.15 மணியளவில் கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
ஏப்ரல் 30 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது.
மே 1 ஆம் தேதி அதிகாலை 5.35 மணியிலிருந்து 5.55 மணிக்குள் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது, அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சும் நிகழ்வு நடைபெறுகிறது.
மே 2 ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார், அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய கள்ளழகர் தசாவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மே 3 ஆம் தேதி மோகினி அவதாரத்தில் எழுந்தருளும் கள்ளழகர் பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருளி மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார்.
மே 4 ஆம் தேதி அதிகாலை பூ பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார், மே 5 ஆம் தேதி காலை 10.40 மணி முதல் 11.10 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார்.
Hindusthan Samachar / ANANDHAN