மதுரையில் கோலாகலமாக தொடங்கியது சித்திரை திருவிழா
மதுரை, 19 ஏப்ரல் (ஹ.ச.) மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, ஏ
சித்திரை கொடியேற்றம்


மதுரை, 19 ஏப்ரல் (ஹ.ச.)

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்தில் ஏற்றப்பட்ட கொடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்ட ரிஷபம் தர்மத்தின் உருவமாகவும், ஆத்மாவின் சின்னமாகவும் கருதப்படுகிறது. உயிர்களை கீழ்நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் இறைவனின் அருள் இந்த விழாவின் மூலம் வெளிப்படுத்தப்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் ஆன்மீகப் பொருளை உணர்த்தும் வகையில் நடைபெறுகின்றன.

முதல் நாள் இரவு, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருள, அன்னை மீனாட்சி சிம்மவாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நான்கு மாசி வீதிகளில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, 8ஆம் நாள் (29ஆம் தேதி) அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் விமர்சையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து 9ஆம் நாள் திக்கு விஜயம் நடைபெறும். 10ஆம் நாள் காலை 8.35 மணிக்கு மேல் அன்னை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை 7 மணியளவில் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இவ்வாறு 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஒட்டுமொத்த மதுரையும் விழாக்கோலமாக மாறி, பக்தர்கள் வருகைக்குத் தயாராகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P