இரண்டாவது முறை மட்டுமல்ல, மூன்றாவது முறையும் திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் - அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல், 19 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பழனி சட்டமன்றத் தொக
I Periyasamy


திண்டுக்கல், 19 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பழனி சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பாண்டிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐ. பெரியசாமியிடம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்வியை நிரூபர் எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர்,

என் மீது எந்த வழக்கும் கிடையாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலுக்காக போட்ட 13 வழக்கும் தற்போது முடிந்துவிட்டன.

ஒரே ஒரு வழக்கும் மட்டும் உச்சநீதிமன்ற தடையில் உள்ளது. அண்ணாமலை யார்? அவர் என்ன நீதிபதியா? உச்சநீதிமன்றம் எதுவும் வைத்துள்ளாரா?

அண்ணாமலை அரசியல் விளம்பரத்திற்காக இப்படியெல்லாம் பேசுகிறார்.

என் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததாக சொல்வதெல்லாம் பொய். அவர்கள் வந்து டீ குடித்து விட்டுத்தான் சென்றார்கள்.

வரும் 21-ஆம் தேதியோடு, அதாவது இன்னும் 4 நாட்களில் அவர்களின் சாயம் வெளுத்துவிடும் என்றார்.

திமுகவின் பிடிவாதத்தால் தமிழ்நாடு நிறைய இழக்கப்போகிறது என நிர்மலா சீதாராமன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர்,

நிர்மலா சீதாராமன் சொல்வது போல தமிழ்நாடு எதையும் இழக்காது. திமுக தன்மானமுள்ள இயக்கம், சொந்தக் காலில் நிற்கும் எனத் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை குறித்த கேள்விக்கு,

எடப்பாடி பழனிசாமி தொகுதி மறுவரையறை மசோதாவை முழுமையாகப் படிக்காமல் பேசுகிறார்.

தமிழ்நாட்டிற்கு எத்தனை இடங்கள் வரும் என்று அந்த மசோதாவில் ஏன் சொல்லவில்லை? தென் மாநிலங்களுக்கு எத்தனை இடங்கள் என்று அமித் ஷா ஏன் குறிப்பிடவில்லை? சட்டம் என்று கொண்டு வந்தால் அதில் தெளிவான எண்ணிக்கை இருக்க வேண்டும். சும்மா வாயால் சொன்னால் போதுமா? என ஆவேசமாக பேசினார்.

மேலும், மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக தடுத்ததாக வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்,

மகளிருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50% உள்ளாட்சியில் வழங்கியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக மோடி அரசு இந்த மசோதாவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியது ஏன்? தேர்தல் நேரத்தில் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? என்றார்.

தொடர்ந்து, திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது எட்டாக்கனி என்ற தவெக தலைவர் விஜய்யின் கருத்துக்கு பதிலளித்த அவர்,

இரண்டாவது முறை மட்டுமல்ல, மூன்றாவது முறையும் திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும். திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சுமார் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என உறுதியாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN