Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 19 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கிருஷ்ணகிரி, இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் விவசாயச் செழுமைக்கு மிகவும் புகழ்பெற்றது.
கிருஷ்ணகிரி இந்தியாவின் மாம்பழத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சுமார் 3,00,000 டன் மாம்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு விளைவிக்கப்படும் மாம்பழங்கள் மற்றும் அதன் சாறு (Pulp) உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி மிகவும் பிரபலமானது.
'கிருஷ்ணா' என்றால் கறுப்பு, 'கிரி' என்றால் மலை. இங்குள்ள கறுப்பு கிரானைட் மலைகளால் இப்பெயர் பெற்றது.
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட கிருஷ்ணகிரி கோட்டை ஒரு முக்கிய வரலாற்றுச் சின்னமாகும். இங்கு சங்க காலத்து நடுகற்கள் மற்றும் பழங்காலப் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை ஒரு சிறந்த பொழுதுபோக்குத் தலமாகும். 'குட்டி இங்கிலாந்து' என்று அழைக்கப்படும் ஓசூர், அதன் குளிர்ந்த காலநிலை மற்றும் ரோஜா மலர் சாகுபடிக்கு உலகளவில் புகழ்பெற்றது.
காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில், சந்திர சூடேஸ்வரர் கோயில், தளி (சின்ன இங்கிலாந்து), மற்றும் பெட்டமுகிலாளம் போன்ற இடங்கள் பயணிகளைக் கவருகின்றன.
இது தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையமாக விளங்குகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் ஓசூர் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
பெங்களூருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையிலும் முன்னேறி வருகிறது.
வாக்காளர்கள் எண்ணிக்கை:
ஆண் - 1,30,891
பெண் - 1,36,414
மூன்றாம் பாலினத்தவர் - 61
மொத்த வாக்காளர்கள் - 2,67,366
இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 40 ஊராட்சிகள் இத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.
இத்தொகுதியில் வன்னியர், வெள்ளாள கவுண்டர், பட்டியலின மக்கள் அதிகளவில் உள்ளனர். இதேபோல இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் பரவலாக உள்ளனர்.
அரசியல் நிலவரம்:
இத்தொகுதி இடைத்தேர்தல்களுடன் சேர்த்து இதுவரை 16 தேர்தல்களை சந்தித்துள்ளன. இதில், 1951-ல் நடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்பி செல்லக்குமார், அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சுகந்தி பார்த்திபன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முகுந்த் பாண்டியன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், உட்கட்சி நிர்வாகிகளிடம் நிலவிய வெளியூர்காரர் என்ற அதிருப்தி போக்கை மாற்றி திமுக நிர்வாகிகளுடன் ‘கை’ கோர்த்து களப்பணியில் ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி உறுப்பினராக ஏற்கெனவே இருந்த நிலையில் மக்களிடம் நன்கு பரிச்சயமாகி உள்ளார்.
எம்பியாக இருந்தபோது செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை முன்னிலைப்படுத்தியும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர் அசோக்குமார், ஏற்கெனவே இத்தொகுதி எம்எல்ஏவாக இருப்பதோடு, கட்சியில் மாவட்டச் செயலாளராக இருப்பதால் மக்களிடம் நன்கு பரிச்சயமான உள்ளூர்காரார் என்பது இவருக்கு பலம்.
கடந்த 2021 தேர்தலில் இவர் போட்டியிட்டபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டு, மக்களை சந்திக்க முடியாத நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் பிரச்சாரத் தால் வெற்றி பெற்றார்.
இம்முறையும் வெற்றியைத் தக்க வைக்க கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தொகுதி முழுவதும் 5 ஆண்டுகள் தொகுதிக்கு செய்த திட்டங்கள், கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதானப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல நாதக வேட்பாளர் சுகந்தி பார்த்திபன், கட்சியின் கொள்கைகள், மாற்றத்திற்கான திட்டங்களை கூறியும், தற்சார்பு பொருளாதார கொள்கை குறித்து பிரச்சாரம் செய்தும் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முகுந்த் பாண்டியன், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b