Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 19 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிரி மாவட்ட ஊட்டியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மு.போஜராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் இன்று ஊட்டி வந்தார்.
ஊட்டியில் ஜெயின் சமூகத்தின் ‘வர்சிதப் விரதம்’ நிறைவு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பஜனை பாடினார்.மேலும், அந்த சமூக மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,
எங்களது வேட்பாளர் மு.போஜராஜன் உங்களுக்குத் தெரிந்த ஒரு பிரபலமான நபர். ராஜஸ்தானி ஜெயின் சமாஜ் அமைப்பின் ஒரு நிகழ்ச்சி ஒரு ஆன்மிக நிகழ்ச்சி என்று சொல்லலாம். இருந்தாலும், இங்கே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதாவது, ஒரு வெளிப்படையான மாற்றம் தெரிகிறது.
அதை எங்களால் காண முடிகிறது. தமிழ்நாட்டில் 'இரட்டை இன்ஜின்' அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப் படவில்லை, அதை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தினோம்.
ஒன்று 131-வது அரசியல் சட்டத் திருத்த மசோதா, இது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கானது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா 2023-ஐ அமல்படுத்த விரும்புகிறோம். அதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதுதான் முக்கியமான மசோதா. அந்த மசோதாவுடன் இரண்டு மசோதாக்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஒன்று தொகுதி மறுவரையறை மசோதா, மூன்றாவது யூனியன் பிரதேச மசோதா. இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.
எனவே, அந்த மசோதாவின் ஒரு பகுதியான பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டபோது, தொகுதி மறுவரையறை மசோதா பரிசீலனைக்கு வரவில்லை. அது நிலுவையில் உள்ளது. அதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிப்போம். இது ஒரு அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடு.
நாங்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். 1950-களில் இருந்தே தொகுதி மறுவரையறை நடந்து வருகிறது. இதற்கு மேல் நாம் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும்? இதனால், எந்த மாநிலமும் நஷ்டமடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b