Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு, தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது மற்றும் தண்டனை குறைப்பது தொடர்பான முக்கிய வழக்குகளில் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே. இளந்திரையன், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், அமைச்சரவை எடுத்த முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக, தண்டனைக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பாக மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க அதிகாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இதே விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் இரண்டு தனித்தனி அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியிருந்தன. ஒரு அமர்வு, அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியாது எனக் கூறியிருந்தது.
மற்றொரு அமர்வு, நிராகரிக்கலாம் எனத் தீர்ப்பளித்திருந்தது.
இதனால் உருவான சட்ட குழப்பத்தைத் தீர்க்கும் வகையில், வழக்குகள் முழு அமர்வுக்கு மாற்றப்பட்டன.
இந்த நிலையில், முழு அமர்வு தற்போது வழங்கிய தீர்ப்பின் மூலம், அமைச்சரவை பரிந்துரைகளின் மேலாதிக்கம் குறித்து தெளிவான சட்ட நிலைப்பாடு உருவாகியுள்ளது.
இது மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான அதிகார வரம்புகளை விளக்கும் முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ