பைனான்ஸ் வசூல் விவகாரம்- கர்ப்பிணி பெண்ணிடம் தகாத பேச்சு
திருப்பத்தூர், 02 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டத்தில் பைனான்ஸ் வசூல் தொடர்பாக கர்ப்பிணி பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசியதுடன், தட்டிக்கேட்ட சிறுவனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிரி மங்கலம் அருகே நேருஜி நகர் பகுதியைச் சேர்ந
பைனான்ஸ்


திருப்பத்தூர், 02 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டத்தில் பைனான்ஸ் வசூல் தொடர்பாக கர்ப்பிணி பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசியதுடன், தட்டிக்கேட்ட சிறுவனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதிரி மங்கலம் அருகே நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (29) என்பவர் ஹவுசிங் போர்டு பகுதியில் செயல்படும் ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.50,000 கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

அவர் பெரும்பாலான தவணைகளை முறையாக செலுத்திய நிலையில், மீதமுள்ள ரூ.5,500-ஐ வரும் 4ஆம் தேதி செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்தத் தவணையை முன்கூட்டியே செலுத்துமாறு வற்புறுத்தி, நிறுவன ஊழியர்கள் புவனேஸ்வரியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, அவர் கர்ப்பிணி என்பதையும் பொருட்படுத்தாமல் தகாத வார்த்தைகளில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர் செழியன் (16), “ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலாக, கோபமடைந்த ஊழியர் அந்த சிறுவனை கடுமையாக தாக்கியதுடன், தூக்கி எறிந்தும் கொடூரமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அருகிலிருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சிறுவன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam