Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 02 ஏப்ரல் (ஹி.ச.)
10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரிஷப் பண்ட், மிச்செல் மார்ஷ் களமிறங்கினர். பண்ட் 7 ரன்னில் அவுட் ஆனார். மார்ஷ் 35 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் டெல்லி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
பொறுப்புடன் ஆடிய அப்துல் சமத் 25 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். இறுதியில் லக்னோ 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன், லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் (0 ரன்), பதும் நிசங்கா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் ரானா 15 ரன்னிலும், கேப்டன் அக்சர் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமலும் (0 ரன்) அவுட் ஆகினர்.
இதனால், டெல்லி 4.3 ஓவரில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் ஜோடி சேர்ந்த சமீர் ரிஸ்வி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் டெல்லி அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்களும், ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 39 ரன்களும் சேர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் டெல்லி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். லக்னோ தரப்பில் அந்த அணியின் பிரின்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றிபெற்றது.
Hindusthan Samachar / JANAKI RAM